Home » » அரசுத் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் கிளரிகல் நேர்முகத் தேர்வு

அரசுத் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் கிளரிகல் நேர்முகத் தேர்வு

செப்டம்பர் 09,2013

பொதுத் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் கிளரிகல் எனப்படும் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கான தேர்வு அகில இந்திய அளவில் ஜூலை 14 மற்றும் 21ம் தேதிகளில் இந்தியா முழுவதும் நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பின் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
பொதுவாக வங்கித் தேர்வுகளை விட கடினமானதாக உணரப்பட்ட இந்தத் தேர்வின் முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. 1க்கு 4 என்ற விகிதத்தில் காலியிடங்களுக்கேற்ப நேர்முகத் தேர்வுக்கு போட்டியாளர்கள் அழைக்கப்படவுள்ளனர். மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தேர்வின் முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதற்கு எப்படித் தயாராவது என்ற பரபரப்பு போட்டியாளர்களிடம் காணப்படுகிறது. 
எந்த மாதிரியும் இல்லாத புது மாதிரி என்பது போன்ற விளம்பரம் போல அல்லாது பொதுவாக நேர்முகத் தேர்வுகள் இந்தத் துறையில் கடந்த காலத்தில் எப்படி நடத்தப்பட்டுள்ளன? 15 ஆண்டுகளுக்கும் முன்பாகத் தான் போட்டித் தேர்வு என்ற ஒன்றே இத் துறையில் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய நிதித் துறை பெரிய அளவில் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்திய போதும், ஆயுள் காப்பீட்டுத் துறையிலுள்ள எல்.ஐ.சி., கூட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்திய போதும், பொதுக்காப்பீட்டுத் துறையிலுள்ள 4 அரசு நிறுவனங்களும் பெரிய சீர்திருத்தங்களை செயல்படுத்தவில்லை.
இந்த நிறுவனங்களில் பணியாற்றுவோரில் பெரும்பாலானோர் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் பணி நிறைவு செய்யவுள்ளனர் என்பதே வியப்பான உண்மை. எனவே தற்போதைய பணிச் சேர்க்கை என்பது இந்த நிறுவனங்களை அடுத்த 20 ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்லவிருக்கும் இளைஞர்களை தேர்வு செய்வதாக அமையும் என எதிர்பார்க்கலாம். இனி நேர்முகத் தேர்வுக்கு தயாராவது குறித்த சில தகவல்கள்....
இன்சூரன்ஸ்: நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகிய 4 பொதுத் துறை நிறுவனங்களைப் பற்றிய தகவல்களை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
இவற்றின் தலைமையிடங்கள், தலைவர்களின் பெயர்கள், இவை எந்த அமைச்சரவையின் கீழ் இயங்குகின்றன, சமீபத்திய செயல்பாடுகள், எத்தனை கிளைகள், நிர்வாக வடிவமைப்பு போன்ற தகவல்களை சேகரித்துக் கொள்ள வேண்டும். இவை ஐ.ஆர்.டி.ஏ., எனப்படும் இன்சூரன்ஸ் ஒழுங்குபடுத்தும் ஆணையம் பற்றிய தகவல்கள், இத் துறையில் செயல்படும் தனியார் துறை நிறுவனங்கள், அவற்றின் செயல்பாடுகள் போன்றவற்றை அறிவதும் முக்கியம். 
இன்சூரன்ஸ் என்றால் என்ன, அவற்றின் வகைகள் என்ன, பொது இன்சூரன்ஸ் மற்றும் ஆயுள்
இன்சூரன்ஸ் இவற்றுக்கிடையேயான வேறுபாடு, பிரிமீயம் என்றால் என்ன, இன்சூரன்ஸ் தொகை என்றால் என்ன போன்ற இன்சூரன்ஸ் அடிப்படைகளை அறிவதும் முக்கியம். 
பொது அறிவு மற்றும் நடப்புச் செய்திகள்: எந்த ஒரு நேர்முகத் தேர்வைப் போலவே இத் துறையிலும் இப்பிரிவு வினாக்கள் அதிகம் கேட்கப்படுகின்றன. விவாதத்தை உள்ளடக்கியதாக இல்லாமல் நேரடி கேள்வி பதில்களாகவே இவை கடந்த காலத்தில் கேட்கப்பட்டுள்ளன.
உதாரணமாக உணவுப் பாதுகாப்பு சட்டம் தேவையா இல்லையா என்பதாக இல்லாமல் எப்போது இயற்றப்பட்டது, எந்தக் கட்சிகள் ஆதரித்தன, எவை எதிர்த்தன, இதன் பலன்கள் என்ன, மொத்த நிதி ஒதுக்கீடு என்ன என்பதாக நடப்புச் செய்திகளிலிருந்து கேள்விகள் எழலாம். எத்தனை மாநிலங்கள், எத்தனை மாவட்டங்கள், எத்தனை மாநகராட்சிகள், பிற முக்கிய நடப்புகள் போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படலாம். செய்தித்தாள்களைப் படிப்பது, பொது அறிவுப் புத்தகங்களிலிருந்து இதற்குத் தயாராவது போன்றவை முக்கியம். 
படிப்பிலிருந்து கேள்விகள்: உங்களது தகுதிக்கேற்ப அந்த பாடத்திலிருந்து கேள்விகள் அமையும். உதாரணமாக எம்.எஸ்சி., படித்துள்ள ஒருவரிடமிருந்து அவரது பாடமாக இயற்பியல் இருந்தால் அதிலிருந்து கேள்விகள் அமையலாம். பெரிய ஆழ்ந்த கேள்விகளாக இவை இல்லாமல் நமது அடிப்படை பாட அறிவை சோதிப்பதாக இவை அமையும்.
வணிகவியலில் பட்ட மேற்படிப்பு முடித்திருக்கும் ஒருவரிடம் பாலன்ஸ் சீட் ஒன்றை காட்டி அதிலிருந்து அந்த நிறுவனத்தின் செயல்பாடு எப்படி எனக் கூற முடியுமா என்று கேட்கப்படலாம். பாலன்ஸ் சீட் என்பதில் சிறப்பான புரிதல் இருக்கும் ஒருவரால் மட்டுமே இதற்கு விடையளிக்க முடியும். இன்று பலரும் இன்ஜினியரிங் முடித்தவராக இருப்பதால், அந்த பாடங்களிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம். 
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் தான் இந்த நேர்முகத் தேர்வு குழுவில் இடம் பெற வேண்டும் என்பதில்லை. கல்லூரி ஆசிரியர்களையும் துறை சார்ந்த நிபுணர்களையும் நேர்முகத் தேர்விற்காக சிறப்புப் பணியில் இந்த நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் அதிகம். 
தனிப்பட்ட கேள்விகள்: உங்களுக்கான சிறப்புப் பகுதி இதுதான். இன்ஜினியரிங் முடித்துவிட்டு இன்சூரன்ஸ் கம்பெனிக்கு எதற்கு வரவேண்டும்? உங்கள் பலம் என்ன, பலவீனம் என்ன, பொழுது போக்கு என்ன, உங்களது லட்சியம் என்ன, எதற்காக இந்த வேலையை உங்களுக்குத் தரவேண்டும், இது கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள், வேறு நல்ல வேலை கிடைத்தால் இதை விட்டுவிட மாட்டீர்களா போன்ற கேள்விகள் தான் உங்களைப் பற்றிய உண்மையான மதிப்பீட்டை குழுவுக்குத் தர முடியும். எனவே இதற்கு சிறப்பாக பதில் எழுதி பழகிக் கொள்ளுங்கள். பின் நேர்முகத் தேர்வில் பதிலளிக்க இது மிகவும் உதவும். இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நேர்முகத் தேர்வுக்காக சிறப்பாகத் தயாராகுங்கள்.
Jika Anda menyukai Artikel di blog ini, Silahkan klik disini untuk berlangganan gratis via email, dengan begitu Anda akan mendapat kiriman artikel setiap ada artikel yang terbit di Creating Website

No comments:

Post a Comment

 

Copyright © 2011. Tamilnadu Results - All Rights Reserved

Proudly powered by Blogger